Thursday, December 25, 2003

சொர்க்கத்திலிருந்து நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் ...எனக்கு இ-மெயிலில் வந்த ஜோக் ...

சுப்புவும் , குப்புவும் நண்பர்கள் .. இருவருமே கிரிக்கெட் பைத்தியங்கள் . இன்று நேற்றல்ல 50 வருடங்களாக எந்த கிரிக்கெட் போட்டியையும் பார்க்காமல் தவற விட்டதில்லை ... இருவருக்கும் இப்போது வயது மிக அதிகமாகிவிட்டது .. அவர்களுக்கு இப்போதுள்ள கவலையெல்லாம் சொர்க்கத்திலும் கிரிக்கெட் இருக்குமா என்பதுதான் ..எனவே யோசித்து ஒரு முடிவுக்கு வ்ந்தார்கள் .. முதலில் யார் இறந்தாலும் சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு உண்டா என்பதை மற்றவருக்குச் சொல்லிவிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் ..

சுப்பு இந்தியா பாகிஸ்தானுடன் பெருவெற்றி பெற்ற விளையாட்டைப் பார்த்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து சந்தோஷமாக இறந்துபோனார் ... இது நடந்த சில சில நாட்கள் கழிந்தது ..குப்பு தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர் தலைமாட்டில் ஒரு குரல் ..

" .... குப்பு ..! எழுந்திரு .. நான் சுப்பு வந்திருக்கிறேன் .."

" ஆ... என்ன ஆச்சரியம் .. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை .. "

"... சரி .. நான் உனக்கு ஒரு சந்தோஷமான விஷயமும் , துயரமான விஷயமும் சொல்லப்போகிறேன் ... எதை முதலில் கேட்கப்போகிறாய் ...?"

" .. அதெல்லாம் இருக்கட்டும் ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டா அதை முதலில் சொல் .. "

" ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டு ... அதுதான் நான் உனக்குச் சொல்ல வந்த சந்தோஷமான விஷயம் ... "


"... சரி இப்போது அந்த சோகமான விஷயத்தையும் சொல் .... "

" ... வேறொன்றுமில்லை ... நாளைக் காலையில் சொர்க்கத்தில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ..... "

Wednesday, December 17, 2003

என் அறையின் மூலையில் ... !

*

என்

அறையின் மூலையில் ...


எழுதித் தீர்ந்த

பேனாக்கள்...


உழைத்துத் தேய்ந்த

செருப்புகள்....


பலர் படித்துக் கிழிந்த

புத்தகங்கள்...


பல நாள் எரிந்து தீர்ந்த

மெழுகுவர்த்திகள் ...


காய்ந்து உலர்ந்த

மலர்கள்...


கடமை முடித்த பெருமிதத்தில்

அனைத்துமே ..


அறையின் நடுவே புத்தம் புதிதாய்

நான் மட்டும்.... !

*

Tuesday, December 16, 2003

ரொம்பப் பிடிக்கும்.... !

*

உருவ வழிபாடு வேண்டாம்

என்றுசொன்ன புத்தனின்

சிலை எனக்குப் பிடிக்கும்....


சாதி பாவமென்ற பாரதியை

ரொம்பப் பிடிக்கும்..

என் சாதியென்பதால்......


அஹிம்சைத் தத்துவம் சொன்ன

காந்தியை யாராவது பழித்தால்

கொலை கூடச் செய்வேன்.... !

இனிக்கும் நினைவுகள்... !!!!*
சன்னல் வழியாய்க் கீழே பார்த்தால்
கட்டெறும்பாய் ஊர்ந்து செல்லும் வண்டிகள்..
அந்தச் சாலையின் அருகே பூங்காவில்
உற்சாகமாய் விளையாடும்
சின்னஞ்சிறு பிஞ்சுகள்...

சிறுமிகள் ஊஞ்சலாட..
ஒரு சிறுவன் மணலிலே தனக்கே தனக்காய்
ஒரு மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறான்...

இன்பமென்ற வார்த்தையே புரியாமல்
இன்பம் தவிர எதுவுமே அறியாமல்
எண்ணும்போதெல்லாம்
இனிக்கும் நாட்கள்....

அடடா... இன்பமென்றால் அதுதானென்று
யாருமப்போது சொல்லவில்லை...
சொன்னாலும் புரியாத வயது அது....

பள்ளியின் கட்டடங்கள்..
சுற்றி நின்ற பசுமரங்கள்....
அதை நினைத்தால் அழகாயிருக்கிறது..
ஆனால் அது அன்றைக்கென்னவோ
அவ்வளவு அழகாயில்லை...

பள்ளியிலே செய்திட்ட குறும்புகள்தான் எத்தனை..
அதற்காக வாங்கிய பிரம்படிகள் ....

பிரம்படிகள்அன்று வலித்தாலும்..
இப்போது நினைத்தால்
அதுவும் கூடத் தேனாய் இனிக்கிறதே
இது என்ன மாயம்...?

அன்று படித்த சித்திரக்கதையும்..
அம்புலிமாமாவும்.. கார்ட்டூன் படமும்..
இன்றைக்குத்தான் நல்லாவேயில்லை..

மழைநீரில் ஓட விட்ட
அந்தக் காகிகக் கப்பலுக்கு
அன்று செய்த
பிரார்த்தனைகள்...

பக்கத்து வீட்டுப் பையனிடம்..
பள்ளியிலே போட்ட சண்டைகள்..
அப்போது போட்ட சவால்கள், சபதங்கள்..
இப்போது நினைத்தால்
சிரிப்பாய் வருகிறது....

பள்ளிக்கெதிரே
அந்தப் பாட்டி விற்ற சீடைபோல்
இன்று ஏன் எதுவும் சுவையாயில்லை...?

நினைத்ததைச் செய்யச் சுதந்திரமிருந்தாலும்
இன்று எத்தனையோ நண்பர்கள் சுற்றியிருந்தாலும்
ஆயிரமாய்.. லட்சமாய் கையில் புரட்டாலும்..
அன்றிருந்த அந்த இன்பம் மட்டும் எங்கே போனது....?

இவையெல்லாம்...
யாருக்கும் புரியாத
மர்மங்கள்...

சன்னல் வழியாய்க் கீழே பார்த்தால்
கட்டெறும்பாய் ஊர்ந்து செல்லும் வண்டிகள்..
அந்தச் சாலையின் அருகே பூங்காவில்
உற்சாகமாய் விளையாடும்
சின்னஞ்சிறு பிஞ்சுகள்...

சிறுமிகள் ஊஞ்சலாட..
ஒரு சிறுவன் மணலிலே தனக்கே தனக்காய்
ஒரு மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறான்...!

*

தண்ணீரின் தாகம் !

*

நான் ஒரு சிரஞ்சீவி !

காலச்சக்கரத்தால் அழிக்கப்படா

சிற்சில பேர்களிலே

நான் முதல்வன்.


நானே பெரும்பகுதி !

இவ்வுலகில் மட்டுமல்ல,

உங்கள் உடலிலும்தான்.


நான் சமத்துவத்திற்கோர் முன்னுதாரணம் !

கர்ப்பக்கிரகக் கடவுளையும்,

காரிருள் நெஞ்சம் கொண்ட கடையோனையும்

சமமாகப் பாவித்து நீராட்டுவதால்.


நான் தவிர்க்கமுடியாதவன் !

மண்ணை,பொன்னை,பெண்ணை வெறுத்தோரும்

என்னை வேண்டாமென்று சொல்லமுடியாததால்.

நான் பொதுநலவாதி !

பிறரை சுத்தமாக்கி

நான் அழுக்காவதால்.


நான் இவ்வுலகத் தேரின் அச்சாணி !

அதுமட்டுமல்ல,

அத்தேரின் சக்கரங்களும் நானேதான்.


என்னைப் பாராட்டும் மக்களே !

ஒரு சிறு விண்ணப்பம் ...

கேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு

என் பெயரைச் சூட்டாதீர் !!!!

*