இனிக்கும் நினைவுகள்... !!!!
*
சன்னல் வழியாய்க் கீழே பார்த்தால்
கட்டெறும்பாய் ஊர்ந்து செல்லும் வண்டிகள்..
அந்தச் சாலையின் அருகே பூங்காவில்
உற்சாகமாய் விளையாடும்
சின்னஞ்சிறு பிஞ்சுகள்...
சிறுமிகள் ஊஞ்சலாட..
ஒரு சிறுவன் மணலிலே தனக்கே தனக்காய்
ஒரு மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறான்...
இன்பமென்ற வார்த்தையே புரியாமல்
இன்பம் தவிர எதுவுமே அறியாமல்
எண்ணும்போதெல்லாம்
இனிக்கும் நாட்கள்....
அடடா... இன்பமென்றால் அதுதானென்று
யாருமப்போது சொல்லவில்லை...
சொன்னாலும் புரியாத வயது அது....
பள்ளியின் கட்டடங்கள்..
சுற்றி நின்ற பசுமரங்கள்....
அதை நினைத்தால் அழகாயிருக்கிறது..
ஆனால் அது அன்றைக்கென்னவோ
அவ்வளவு அழகாயில்லை...
பள்ளியிலே செய்திட்ட குறும்புகள்தான் எத்தனை..
அதற்காக வாங்கிய பிரம்படிகள் ....
பிரம்படிகள்அன்று வலித்தாலும்..
இப்போது நினைத்தால்
அதுவும் கூடத் தேனாய் இனிக்கிறதே
இது என்ன மாயம்...?
அன்று படித்த சித்திரக்கதையும்..
அம்புலிமாமாவும்.. கார்ட்டூன் படமும்..
இன்றைக்குத்தான் நல்லாவேயில்லை..
மழைநீரில் ஓட விட்ட
அந்தக் காகிகக் கப்பலுக்கு
அன்று செய்த
பிரார்த்தனைகள்...
பக்கத்து வீட்டுப் பையனிடம்..
பள்ளியிலே போட்ட சண்டைகள்..
அப்போது போட்ட சவால்கள், சபதங்கள்..
இப்போது நினைத்தால்
சிரிப்பாய் வருகிறது....
பள்ளிக்கெதிரே
அந்தப் பாட்டி விற்ற சீடைபோல்
இன்று ஏன் எதுவும் சுவையாயில்லை...?
நினைத்ததைச் செய்யச் சுதந்திரமிருந்தாலும்
இன்று எத்தனையோ நண்பர்கள் சுற்றியிருந்தாலும்
ஆயிரமாய்.. லட்சமாய் கையில் புரட்டாலும்..
அன்றிருந்த அந்த இன்பம் மட்டும் எங்கே போனது....?
இவையெல்லாம்...
யாருக்கும் புரியாத
மர்மங்கள்...
சன்னல் வழியாய்க் கீழே பார்த்தால்
கட்டெறும்பாய் ஊர்ந்து செல்லும் வண்டிகள்..
அந்தச் சாலையின் அருகே பூங்காவில்
உற்சாகமாய் விளையாடும்
சின்னஞ்சிறு பிஞ்சுகள்...
சிறுமிகள் ஊஞ்சலாட..
ஒரு சிறுவன் மணலிலே தனக்கே தனக்காய்
ஒரு மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறான்...!
*
0 Comments:
Post a Comment
<< Home