அடுத்தவராய் நான்
என் கவிதை
நான் மறந்து
ரசிக்க வேண்டும்
பிறருடையதாய்.
நான் சமைத்த
ரசத்தையும், பொறியலையும்
அடுத்தவராய்
நானே ருசிக்க வேண்டும்.
எனைக் காணா இன்னொருவன்
வரைய வேண்டும்
என் படத்தை .
கேட்கவேண்டும்
எனது எண்ணம்
அடுத்தவர் வாய்ச் சொல்லாக.
கடவுளாலும் முடியாது
மனிதர்களின் நம்பிக்கையும் நடக்கப்போகின்றவையும் ஒன்றாக இருக்க வெண்டுமென்பதில்லை. கீழேயுள்ளதைப் படித்துப் பாருங்கள்.
"..கடவுளால்கூட இந்தக் கப்பலைக் கவிழ்க்கமுடியாது.."
-டைட்டானிக் கப்பலிலின் டெகன்ட் ஏப்ரல் 10, 1912 அன்று சொன்னது.
ஒன்றின் ஊடாய் ஒன்றுகள்
இந்தப் படத்தில் சிந்திக்க வேண்டியது எதுவும் இல்லை. நிறங்களின் விளையாட்டையும், படிமானத்தையும் பார்த்து ரசிக்கலாம் அவ்வளவே. இதற்கு நவீன ஓவியம் என்பதுபோல் ஏதாவது பிடித்த பெயரை வைத்துக் கொள்ளுங்கள், யாராவது கிறுக்கல் என்பதாய்க் கருத்துச் சொல்ல விரும்பினால் எனக்கு ஆட்சேபனை இல்லை :-).
காலம் மாறிப்போச்சு - கம்ப்யூட்டர்
அந்தக் கால எண்ணங்கள், கருத்துக்கள் பல இன்றைய மக்களுக்கு வியப்பையும், சிரிப்பையும் தரும் என்பதற்கு உதாரணங்கள் சில.
"உலகில் மொத்தம் ஐந்து கம்ப்யூட்டர்களை விற்கச் சாத்தியமும், சந்தையும் உள்ளது" - தாமஸ் வாட்ஸன், IBM நிறுவன சேர்மன், 1943.
"யாரின் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என்ற அவசியத்துக்கான காரணமே இல்லை" - கென் ஒல்சன்,
president, chairman and founder of Digital Equipment Corp., 1977.
"... ஆனால்... இது எதற்குத்தான் பயன்படும்.. ?`" - IBM நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் மைக்ரோசிப்புகள் குறித்து, 1968.
-- இன்னும் வரும்.
காணாமல் போனவைகள்
பயமூட்டும் ஜந்துக்கள்
மிளகாய், இஞ்சி, மிளகு
ஒரு காலத்தில்.
அப்போதெல்லாம்
தண்ணீர்
பல சொம்புகள்
தேவைப்படும்,
சிறு வெங்காயத்துக்கே.
இளம் நாவின்
சுவை மொட்டுக்கள்
புத்தம் புதியனவாய் இருந்தபோது
எனைக் கண்கலக்கி
உடல் பதற வைத்திருக்கிறது
எண்ணெயில் பொறித்தெடுத்த
பிஞ்சு மிளகாயின் சிறுநுனிகூட .
வியந்திருக்கிறேன்
பச்சை மிளகாயை
இயல்பாய்க் கடித்துத் தின்போரை,
அவர்கள் எதையோ
அடிவேர்வரை இழந்து விட்டிருக்கிறார்கள்
என்பதை அறியாமலே.
கால ஓட்டத்தில்
எரிச்சல் தரும் பச்சை மிளகாய்
வெள்ளரிப் பிஞ்சாகியிருப்பது
எனக்கு
வசதியாய்த்தான் இருக்கிறது.
என்றாலும்
எனக்குப் புரியவே இல்லை.
சீரகத்தின் காரத்துக்குக்
குடம்குடமாய்க்
கண்ணீர் விடுவோரைப் பார்த்தால்
புன்னகை வராமல்
ஏன் எனக்கு
அவர்கள்மேல்
இப்போதெல்லாம்
பொறாமை ?.