Thursday, May 12, 2005

வண்ணத்துப்பூச்சி !!


பின்னால் எந்த வரலாறும் இதற்கு இல்லை
இது நொடிபோல் பிரிந்திருக்கிறது
தன்னைச் சுற்றியே சிறகடிக்கிறது.

இதற்கு நாளை என்பது இல்லை
தொடர்பில்லை நேற்றுடனும்
இது இன்றுகூட பலபொருள் காட்டி மயக்கும் சிலேடையாய்.


சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி இது ..!
இந்த சோகமான மலைகளை வைத்திருக்கிறது
தன் இறகுக்குக் கீழேயே.


சின்னஞ் சிறு மஞ்சள் நிறமாய்
திறக்கிறது மூடும்முன், திறக்குமுன் மூடுகிறது
அட ..!!


எங்கே அது ..??.

***

கவிஞர் கோலேட்கரின் butterfly ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பு

Tuesday, May 10, 2005

பொட்டலக் காகிதங்கள்

தேவையென்றால் யாகம் வளர்ப்பார்கள்
இல்லையென்றால்
வெறுப்புடன் குடைபிடிப்பர்
முணுமுணுத்தது
தூறலாய்.

********

நினைத்தேன்
வாழ்க்கையைக் காதலியாய்.
அதனால்தானோ
விரட்டி விரட்டி அடிக்கிறது?
கோபமாய்
சில சமயம் செல்லமாய்.

********

யாரையும் தொடவிட்டதில்லை
எனதை அனுமதியின்றி.
ஆனால் எப்படிக் காணாமல் போனது
மனம் மட்டும் ?

********

எனவே காதலி
கடைசியில்
கவிதையாவது கிடைக்கும்.

********

asl? brb rut
மனங்கள் மட்டுமல்ல
சொற்களும் சுருங்கிவிட்டன
இண்டர்நெட்டால்.

********

பொரிகடலை கட்டும்
துண்டுத் தாளானது
கடைசியில்.
ஒரு காலத்தில்
புத்தகமாய்ப் போட இருந்தேன்.